குவைத்தில் புற்றுநோயை உண்டாக்கும் அழகுசாதனப் பொருட்களுக்கு தடை!
குவைத் சிட்டி: குவைத்தில் புற்றுநோயை உண்டாக்கும் அழகுசாதனப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குவைத் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் மசென் அல் நஹாத், லிலியால் எனப்படும் அழகுசாதனப் பொருட்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும், வாங்கவும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அழகுசாதன தயாரிப்புகள் மற்றும் சலவை பொடிகளில் வாசனை திரவியமாகப் பயன்படுத்தப்படும் லிலியால் எனப்படும் பியூட்டில்ஃபெனைல் மெத்தில்ப்ரோபியோனல் ரசாயனப் பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டதை அடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக லில்லியம் ரசாயன கலைவையானது புற்றுநோய் மற்றும் இனப்பெருக்கத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை விதிக்கப்பட்டது. தற்போது குவைத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருந்து கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இருந்து இவை திரும்பப் பெறப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.