தனிப்பட்ட விசிட் விசாவிற்கான வழிமுறையை அறிவித்த சவூதி!
ரியாத்: தனிப்பட்ட விசிட் விசாவில் (personal visit visa) சவூதி அரேபியாவிற்குள் நுழைபவர்கள் நாடு முழுவதும் சுதந்திரமாக பயணம் செய்யலாம், உம்ரா செய்யலாம், மதீனா ஜியாரத் செய்யலாம், வரலாற்று மற்றும் மத தலங்களுக்குச் செல்லலாம் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம் என சவூதி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவிற்குச் செல்ல அழைக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதன் மூலமும், உறுதிமொழிப் பத்திரத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும் விண்ணப்ப செயல்முறையை நிறைவு செய்பவர்களுக்கு விசா வழங்கப்படும்.
இதற்குப் பிறகு, சவூதி அரேபியாவுக்குச் செல்ல அழைக்கப்பட்டவர்கள் நுழைவு விசா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, விசா தளம் மூலம் கட்டணம் மற்றும் மருத்துவ காப்பீட்டுக் கட்டணங்களைச் செலுத்தி, விண்ணப்பம் மற்றும் பாஸ்போர்ட்டை அந்தந்த நாடுகளில் உள்ள சவுதி தூதரகம் அல்லது தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், எல்லைச் சாவடிகள் மற்றும் துறைமுகங்கள் வழியாக பார்வையாளர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் விசா முத்திரையிடப்பட்ட பிறகு சவூதி அரேபியாவிற்குள் நுழைய முடியும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.