துபாய்: குடியிருப்புகளில் வசிப்பவர்கள் ரூம்மெட்ஸ் விவரங்களை இனி பதிவு செய்ய வேண்டியதில்லை!
துபாயில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களின் உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் வில்லா அல்லது ஃபிளாட்டை வாடகைக்கு எடுத்தவர்கள் என துபாயில் தங்கியிருக்கும் அனைவரும், தங்களுடன் சேர்ந்து தங்கியிருக்கும் சக குடியிருப்பாளர்களின் விவரங்களை இரண்டு வாரங்களுக்குள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று துபாய் நிலத்துறை (DLD-Dubai Land Department) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், சக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே அறிவித்தால் போதும் என்று துபாய் நிலத் துறை (DLD) தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக செப்டம்பரில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி குடியிருப்பாளர்கள் தங்கள் உடன் தங்கியிருப்பவர்களின் பெயர்கள், எமிரேட்ஸ் ஐடி மற்றும் பிறந்த தேதிகளை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் நிலத்துறை (DLD) - இன் புதிய உத்தரவுகளின்படி, குடியிருப்பாளர்கள் அவர்களுடன் சேர்ந்து வசிப்பவர்களின் எண்ணிக்கையை மட்டுமே அறிவிக்க வேண்டும் என்றும் மற்ற அனைத்து தனிப்பட்ட தரவுகளும் விருப்பமானது என்றும் கூறப்பட்டுள்ளது,
உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும், தற்போதுள்ள கட்டிடங்களில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் தரத்தை மேம்படுத்துவதற்கும் துபாய் நிலத் துறையின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, வாடகைக்கு எடுத்தவர்கள் தங்களுடன் இருக்கும் சக குடியிருப்பவர்களின் எண்ணிக்கையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று துபாய் குடியிருப்பாளர்களுக்கு DLD வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த சமீபத்திய புதுப்பித்தலின் காரணமாக, துபாய் REST செயலியானது, பதிவு செய்தலை முடிக்க, சக குடியிருப்பாளர்களின் எண்ணிக்கையை மட்டுமே கேட்கிறது என கூறப்பட்டுள்ளது. அதில் பதிவு செய்தவுடன், குத்தகை ஒப்பந்தத்தில் (Tenancy Contract) விவரங்கள் தானாகவே புதுப்பிக்கப்படும். மேலும், ஒரு வீட்டில் வசிக்கும் அனைத்து மக்களையும் பதிவு செய்வது, ஒவ்வொரு குடியிருப்பாளரும் முகவரிக்கான சான்றாக Ejari ஒப்பந்தத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.