ஷார்ஜாவில் வங்கி ஊழியர் போல் போன் செய்து வங்கிக் கணக்கில் மோசடி செய்த கும்பல் கைது!
ஷார்ஜா: வங்கி ஊழியர்கள் போல் நடித்து தொலைபேசி மூலம் வங்கி கணக்கில் பணத்தை திருடிய 5 பேர் கொண்ட மோசடி கும்பல் ஷார்ஜா காவல்துறையின் சிஐடி பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மோசடி அவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கி ஊழியர் போல் போன் செய்து, தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர், இல்லையெனில், அவர்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மோசடி என்று தெரியாமல் தகவல் கொடுத்தவர்களின் கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. பணத்தை இழந்தவர்கள் காவல்துறையை அணுகியதை அடுத்தே நடத்தப்பட்ட நடவடிக்கையில் குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.
மோசடி செய்தவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை கண்டறிந்த சிஐடி குழுவினர், அந்த குடியிருப்பில் சோதனை நடத்தி அவர்களை கைது செய்தனர். அவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய கைத்தொலைபேசி, கணினி, சிம்கார்டுகள் போன்றவை மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் கவனமாக இருக்கவும், வங்கி விவரங்கள் அல்லது தனிப்பட்ட தகவல்களை யார் அழைத்தாலும் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும் போலீசார் பொதுமக்களை எச்சரித்தனர். வங்கி விவரங்களை அப்டேட் செய்பவர்கள் வங்கிக்கு நேரடியாகச் சென்று தகவல் தெரிவிக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்தனர்.