தொழில்நுட்பக் கோளாறு - ஓமானில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விமானம் 45 நிமிடங்களில் ரிட்டன்!
மஸ்கட்: ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்ட 45 நிமிடங்களில் உடனடியாக மஸ்கட் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஓமன் நேரப்படி காலை 10.30 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம் IX 554, மாலை 3.30 மணியளவில் மஸ்கட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஆனால், மஸ்கட்டில் இருந்து புறப்பட்ட 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி பயணிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விமானம் உடனடியாக மஸ்கட் சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
விமானத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததை விமானி கவனித்ததாகவும், இதனால் விமானம் இனி தனது பயணத்தை தொடர முடியாது என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பயணிகள் வேறு விமானம் மூலம் திருவனந்தபுரம் அல்லது கொச்சிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.