ஜித்தாவில் துவங்கிய சர்வதேச புத்தகக் கண்காட்சி..!

ஜித்தாவில் துவங்கிய சர்வதேச புத்தகக் கண்காட்சி..!

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் சர்வதேச புத்தகக் கண்காட்சி சூப்பர்டோம் சென்டரில் தொடங்கியது. 400க்கும் மேற்பட்ட அரங்குகளுடன் டிசம்பர் 8 முதல் 17 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 900க்கும் மேற்பட்ட உள்ளூர், அரபு மற்றும் சர்வதேச வெளியீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். 

கலாச்சார அமைச்சகத்தின் குடையின் கீழ் இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தால் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது புத்தகக் கண்காட்சி ஜித்தா ஆகும். ஜூன் மாதம் மதீனாவிலும், அக்டோபரில் ரியாத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டது.

கலாச்சாரத் தலைவர்கள், சவூதி மற்றும் வெளிநாட்டுப் பேச்சாளர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில் ஜித்தாவில் தொடக்க விழா நடைபெற்றது. கண்காட்சி நாட்களில் 100க்கும் மேற்பட்ட பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். டிஜிட்டல் வெளியீடு மற்றும் அறிவியல் புனைகதைகளை பகுப்பாய்வு செய்யும் இரண்டு மாநாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் இந்த விவகாரங்களை பகுப்பாய்வு செய்யும் மாநாடுகள் நடைபெறுவது இதுவே முதல் முறை என இலக்கியம், வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையத்தின் முதன்மை அதிகாரி டாக்டர் முஹம்மது ஹசன் அலவான் தெரிவித்தார்.

ஜித்தாவின் மையத்தில் ஒரு ஒருங்கிணைந்த அறிவு பயணத்தை புத்தக கண்காட்சி வழங்குகிறது என்றும்,  சவுதி எழுத்தாளர்களின் இலக்கிய பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.