சவூதியில் வெளிநாட்டு ஊழியர்களின் டிக்கெட் உள்ளிட்ட தொழிலாளர் நலன் சார்ந்த அனைத்து செலவுகளை முதலாளியே ஏற்க வேண்டும்!
ஜித்தா: சவூதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களின் தொழிலாளர் நலன் தொடர்பான செலவுகளை முதலாளியே ஏற்க வேண்டும் என மனித மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்தகைய செலவுகளை தொழிலாளர்களிடம் இருந்து வசூலிக்கக் கூடாது. வேலை ஒப்பந்தம் முடிந்த தொழிலாளர்களுக்கான ரிட்டர்ன் டிக்கெட்டின் கட்டணத்தையும் முதலாளியே ஏற்கவேண்டும்.
நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களை ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கட்டணங்களை முதலாளியே ஏற்க வேண்டும் என்றும் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தொழிலாளர்களின் தொழில் மாற்றம், இகாமா கட்டணம், பணி அனுமதிக் கட்டணம், இகாமா மற்றும் பணி அனுமதியைப் புதுப்பிப்பதற்கான செலவுகள் மற்றும் அதைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டால் அபராதம் ஆகியவற்றையும் முதலாளியே ஏற்க வேண்டும். அத்தகைய செலவுகளை ஊழியரிடமிருந்து திரும்பப் பெற முடியாது.
அதேபோல் ஒரு பணியாளருக்கு வேலை வழங்கியவரிடமிருந்து அனுபவச் சான்றிதழைப் பெற உரிமை உண்டு. இந்த சான்றிதழில் வேலை தேதி, வேலை ஒப்பந்தம் முடிந்த தேதி மற்றும் கடைசியாக பெற்ற சம்பளம் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். அனுபவச் சான்றிதழுக்காக ஊழியரிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.