குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் துபாய் காவல்துறை!

குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றும் துபாய் காவல்துறை!

துபாய்: சிறு குழந்தைகளின் பெரிய ஆசைகளை கூட பெரியவர்கள் வேடிக்கையாக கருதுவார்கள். எனவே, அத்தகைய ஆசைகளுக்கு நீண்ட ஆயுட்காலம் இல்லை. ஆனால், உலகின் தலைசிறந்த போலீஸ் படைகளில் ஒன்றாக அறியப்படும் துபாய் காவல்துறை, குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி அவர்களை மகிழ்ச்சியடையச் செய்யவே சிறப்புத் திட்டத்தை வகுத்துள்ளது.

‘குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்’ என்கிற திட்டத்தின் மூலம், அயோஷா மற்றும் ஹமத் அஹ்மத் அல் முல்லைன் என்ற இரு சகோதரர்களுக்கு துபாய் காவல்துறையின் சொகுசு காரில் போலீஸ் சீருடை அணிந்து ஊர் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. 

துபாய் போலீஸ் செயலி மூலம் குழந்தைகளின் விருப்பம் குறித்து அவர்களது பெற்றோர் போலீசாருக்கு தெரிவித்தனர். துபாய் காவல்துறையின் சமூக மகிழ்ச்சி பொதுத் துறையின் கீழ் உள்ள பாதுகாப்பு விழிப்புணர்வுத் துறை மற்றும் ஹேம்லிஸ் உடன் இணைந்து இந்த முயற்சியை எடுத்து அந்த விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்தது.

அதன்படி குழந்தைகளுக்கு துபாய் போலீஸ் சீருடைகள் பரிசாக வழங்கப்பட்டதுடன், போலீஸ் சொகுசு காரில் பயணிக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.  துபாய் காவல்துறையின் சமூக மகிழ்ச்சிக்கான பொதுத் துறையின் கீழ் பாதுகாப்பு விழிப்புணர்வு துறையின் இயக்குனர் புட்டி அஹ்மத் பின் தர்விஷ் அல் ஃபலாசி கூறுகையில்,  “ ‘குழந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்’ திட்டம், துபாய் காவல்துறையின் பாதுகாப்பு மற்றும் சமூகத்தில் பாதுகாப்பை உறுதிசெய்து அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.” என தெரிவித்தார்.

தங்கள் குழந்தைகளின் ஆசைக்கு சாதகமாகப் பதிலளித்து நிறைவேற்றிய காவல்துறைக்கு குழந்தைகளின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.