சவுதியில் நடைபெறும் முதல் தேசிய விளையாட்டுப் போட்டிகள்! - கோலாகல துவக்கம்!
ரியாத்: சவுதி அரேபியாவில் முதன்முறையாக நடத்தப்படும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ரியாத்தில் தொடங்கியது. ரியாத்தின் பாக்லூஃப் நகரில் உள்ள கிங் ஃபஹ்த் சர்வதேச அரங்கில் ரியாத் கவர்னர் பைசல் பின் பந்தர் அவர்களால் போட்டிகள் துவக்கி வைக்கப்பட்டன. இந்த விளையாட்டுப் போட்டிகளில் 6,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் 2,000 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிர்வாக மேற்பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
விளையாட்டுத் துறை அமைச்சரும், சவுதி ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் குழுவின் தலைவரும், விளையாட்டு ஏற்பாட்டுக் குழுவின் தலைவருமான அப்துல் அஜிஸ் பின் துர்கி அல் பைசல், விளையாட்டுப் போட்டிகள் குறித்து விளக்கினார்.
பட்டத்து இளவரசரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படும் சவுதி விளையாட்டுப் போட்டிகளின் முதல் நிகழ்வில் 6,000க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்த பொன்னான வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார். 200க்கும் மேற்பட்ட சவூதி கிளப்களில் பல விளையாட்டு வீரர்கள் 40 விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இது தவிர, மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் ஐந்து விளையாட்டுகளில் போட்டியிடும் என்றும் விளையாட்டு அமைச்சர் விளக்கினார்.
ரியாத் நகரில் உள்ள 22 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. ஐந்து பாராலிம்பிக் போட்டிகள் உட்பட 45 விளையாட்டுகளில் 180 போட்டிகளில் 6,000க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். வெற்றியாளர்களுக்கு மொத்தம் 20 கோடி ரியால்கள் மதிப்புள்ள பரிசுகள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றவருக்கு 10 லட்சம் ரியால் பரிசு வழங்கப்படும். வெள்ளிப் பதக்கத்துக்கு மூன்று லட்சம் ரியாலும், வெண்கலப் பதக்கத்துக்கு ஒரு லட்சம் ரியாலும் பரிசுகள் வழங்கப்படுகின்றன.