இதயத்தைப் கெட்ட கொழுப்பில் இருந்து பாதுகாக்கும் இயற்கை உணவுப்பொருட்கள்
இதயம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இதயம் தொடர்பான எந்த நோயும் நவீன உலகில் தீவிரமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், எதிர்பாராத நேரத்தில்உடல் உபாதைகளையும் சில சமயங்களில் மரணத்திற்கும் வழிவகுக்கும். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இதய நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதமும் பெருவாரியான அளவில் உயர்ந்துள்ளது. குறிப்பாக இளம் வயது மரணங்கள் மிகவும் அதிகரித்து நம்மிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்தி வருகிறது எனவே இனி வரும் காலங்களில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க தொடர் முயற்சிகள் தேவை.
இதற்கு முக்கிய காரணங்கள் தவறான வாழ்க்கை முறை, முறையற்ற உணவு முறை, உடல் உழைப்பு இல்லாத இலகுவான வாழ்க்கை முறை, பரம்பரை இருதய நோய்கள் , உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, மருந்துகளின் பக்கவிளைவுகள் போன்றவற்றால் இதய நோய்கள் வரலாம். குறிப்பாக மாரடைப்பு வராமல் இருக்க சரியான உணவுமுறை, உடல் எடையைக் கட்டுப்படுத்த போதுமான உடற்பயிற்சி, வழக்கமான மருத்துவ ஆலோசனை, மன அழுத்தத்தைத் தடுக்க யோகா, தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.
இதய நோய் இதயத்தின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் பாதிக்கிறது. பெரும்பாலான மக்கள் இதய நோய் ஒரு தனிப்பட்ட நோயாகக் கருதுகின்றனர். ஆனால், இதய நோய் என்பது பல்வேறு காரணங்கள் மற்றும் உடலில் ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாகும். ஒரு நபருக்கு ஏற்படும் மாரடைப்பின் வகை உங்கள் இதயம் என்ன, எப்படி பாதிக்கப்படுகிறது என்பதைத் தீர்மானிக்கிறது.
மனித உடலில் தங்கியிருக்கும் அதிகளவிலான உடற்கொழுப்பு அல்லது தீய கொலஸ்ட்ரால் அளவை சரியான உணவுப்பழக்கத்தின் மூலமாக சரிசெய்யலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன . உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம்.
‘ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா’ என்கிற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் அதிகப்படி கொலஸ்ட்ரால், ரத்தக்குழாய்களில் எக்கச்சக்கமாக கொழுப்பு மற்றும் எடைகூட்டும் பொருட்கள் சேர்வதால் ஏற்படுகிறது. இதனால் உடல் ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய் போன்றவற்றிற்கான ரிஸ்கை அதிகமாக்குகிறது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உடலில் சேரும் இந்த கொலஸ்ட்ரால் அளவினை ரத்த மாதிரி ஆய்வின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் உணவுகளை சரியான முறையில் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கெட்ட கொலஸ்ட்ராலிடம் இருந்து காப்பாற்ற முடியும்.
ஹோல் க்ரைன்ஸ் எனப்படும் ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது.
* பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை.
* பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் இவை.
* பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது.
*பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி ஆகியவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக்கூடியவை என்கிறது ஆய்வொன்று. ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.
எனினும், சரியான உணவு முறையுடன் மருத்துவரின் ஆலோசனையும் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதில் இருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள மிக அவசியம் எனப்து குறிப்பிடத்தக்கது.