சவுதி அரேபியாவில் இருந்து வெளிநாட்டவர்கள் பணம் அனுப்புவது குறைந்துள்ளது!
ரியாத்: சவுதி அரேபியாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்புவதை குறைத்துள்ளனர். சவூதி அரேபிய மத்திய வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில், அக்டோபரில் மொத்தமாக 1,124 கோடி ரியால்கள் அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது கடந்த எட்டு மாதங்களில் இல்லாத குறைந்த தொகையாகும். இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளிநாட்டினர் 1,120 கோடி ரியால்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். இதற்குப் பிறகு, கடந்த மாதம் வெளிநாட்டுப் பணம் அனுப்பியதில் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதங்களில், வெளிநாட்டினர் 12,266 கோடி ரியால்களை தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டினர் அனுப்பும் தொகை 5.5 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் பத்து மாதங்களில் வெளிநாட்டினர் 12,980 கோடி ரியால்களை அனுப்பியுள்ளனர். இதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டினர் அனுப்பிய பணத்தில் 714 கோடி ரியால்கள் குறைந்துள்ளது.
சவுதி அரேபியாவில் சுமார் ஒரு கோடி வெளிநாட்டினர் உள்ளனர். அவர்களில் 28 லட்சம் பேர் இந்தியர்கள். நூற்றி ஐம்பது நாடுகளைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவில் பணிபுரிகின்றனர்.