ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை: பள்ளி, அலுவலக வேலை நேரங்கள் குறைப்பு!
தோஹா: ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது ஆரம்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான முன்னேற்பாடுகளை கத்தார் அரசு ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக வரும் நவம்பர் 1 முதல் சுற்றுலாவாசிகள் கத்தார் வர தற்காலிக தடை விதிக்கப்பட்டு சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் கால்பந்து விளையாட்டு போட்டி நடைபெறும் சமயங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அலுவலகங்களுக்குச் செல்லும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் பள்ளி நேரம் குறைக்கப்படும் என்றும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.
நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறும் இந்த கால்பந்து போட்டியின் போது ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், 8 மைதானங்களைச் சுற்றியுள்ள தெருக்களில் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிகழ்வின் முதல் இரண்டு வாரங்களில் வெளிநாட்டு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகபட்ச எண்ணிக்கையை எட்டும் என்றும், இந்த நேரங்களில் 32 நாடுகளுக்கு போட்டிகள் நடத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
போக்குவரத்தை சரிபடுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் கீழ், நவம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை 20 சதவீத அரசு ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்றும், ஊழியர்கள் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நவம்பர் 1 முதல் நவம்பர் 17 வரை, பள்ளி நேரம் குறைக்கப்பட்டு காலை 7 மணி முதல் மதியம் வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும், பின்னர் மாணவர்களுக்கு நவம்பர் 18 முதல் டிசம்பர் 22 வரை விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.