பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் இனி வரத் தேவையில்லை!

பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் இனி வரத் தேவையில்லை!

சவுதியின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் Dr.Tawfiq Al-Rabiah, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஹஜ் அல்லது உம்ரா செய்வதற்காக சவூதி அரேபியாவுக்குச் செல்ல விரும்பும் பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் (இரத்த உறவினர்) இனி வரத் தேவையில்லை என்று அறிவித்தார்.

திங்களன்று கெய்ரோவில் உள்ள சவுதி தூதரகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஒரு பெண் யாத்ரீகருடன் மஹ்ரம் தேவையா இல்லையா என்பது குறித்த நீடித்த சர்ச்சையை அமைச்சர் முடிவுக்கு கொண்டு வந்தார்.

மக்காவில் உள்ள பெரிய மசூதியின் விரிவாக்கத்திற்கான செலவு சவுதி ரியால் 200  பில்லியனைத் தாண்டியுள்ளதாகவும், புனித மசூதியின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய விரிவாக்கம் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார்.

உலகம் முழுவதிலுமிருந்து வரும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் உம்ரா விசாக்களின் எண்ணிக்கைக்கு ஒதுக்கீடு அல்லது உச்சவரம்பு எதுவும் இல்லை என்று அல்-ரபியா கூறினார். "எந்த வகையான விசாவுடன் சவுதிக்கு வரும் எந்த முஸ்லீமும் உம்ரா செய்யலாம்," என்று அவர் கூறினார்.

ஹஜ் மற்றும் உம்ரா செய்வதற்கான செலவைக் குறைப்பதில் சவுதி அரேபியாவின் ஆர்வத்தை அல்-ரபியா உறுதிப்படுத்தினார், இந்த விஷயம் பல காரணிகளுடன் தொடர்புடையது என்று கூறினார். இரண்டு புனித மசூதிகளுக்குச் செல்ல விரும்புவோருக்கு, நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் பயன்படுத்துதல் மற்றும் அமைச்சகத்தினால் வழங்கப்படும் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் தொடர்பாக அண்மைக் காலத்தில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“யாத்ரீகர்களுக்கு சில சேவைகளை வழங்குவதற்கு ரோபோக்களைப் பயன்படுத்துவதும், நஸ்க் தளத்தை உருவாக்குவதும் இதில் அடங்கும், இது யாத்ரீகர்கள் மற்றும் பெரிய மசூதிக்கு வருபவர்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது. குறுகிய காலத்திற்குள் உம்ரா அனுமதிப்பத்திரத்தை அதற்கான தளத்தில் முன்பதிவு செய்ய முடியும், அதன் பிறகு, 24 மணி நேரத்திற்குள் விசாவைப் பெற முடியும், ” என்று அவர் மேலும் கூறினார்.

நன்றி: சவுதி கெஸட்