ஜித்தாவில் கனமழை; சுரங்கப் பாதைகள் மூடல்!
ஜெட்டா: சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் கனமழை காரணமாக சுரங்கப்பாதைகள் மூடப்பட்டன. பயணிகள் மாற்று வழிகளில் செல்லுமாறு மக்கா கவர்னரேட் பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. அல்சலாம், அல்-அண்டுலுஸ், அல்ஜாரியா, கிங் அப்துல்லா சாலையிலிருந்து மதீனா சாலை, கிங் அப்துல்லா சாலையிலிருந்து கிங் ஃபஹத் சாலை, அமீர் மஜித் சாலை மற்றும் பாலஸ்தீன சாலை, அமீர் மஜித் சாலை மற்றும் ஹிரா சாலை ஆகிய இடங்களில் உள்ள சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
மழை முடியும் வரை மக்கள் வீட்டிலேயே இருக்கவும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் பயணம் செய்வதை தவிர்க்கவும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
விமானப் பயணிகள் அட்டவணையை மீண்டும் சரிபார்த்த பின்னரே விமான நிலையத்தை அடைய அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று ஜித்தா விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜித்தாவின் 16 துணை நகராட்சிகளிலும் கள அலுவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்ந்தால் ஜித்தா, ராபிக் மற்றும் குலைஸ் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று ஜித்தா கல்வி இயக்குநரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹமூத் அல்-சகீரன் அறிவித்துள்ளார்.