குவைத்தில் 45வது சர்வதேச புத்தக கண்காட்சி துவக்கம்!
குவைத் சிட்டி: 45வது குவைத் சர்வதேச புத்தகக் கண்காட்சி மிஷ்ரப் சர்வதேச கண்காட்சி மைதானத்தில் துவங்கியது. இளைஞர் விவகார அமைச்சர் அப்துர்ரஹ்மான் அல் முதைரி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புத்தகத் திருவிழா நாட்டின் மிகப் பெரிய கலாசார நிகழ்வு என்றும், குவைத் இளைஞர்கள் தங்கள் எழுத்து மற்றும் திறமைகளை வெளிப்படுத்த புத்தகத் திருவிழா ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் அமைச்சர் கூறினார்.
குவைத் புத்தகக் கண்காட்சி 1975 இல் தொடங்கியது. கோவிட் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக கண்காட்சி நடைபெறவில்லை. புத்தகக் கண்காட்சியில் 29 நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். 404 பதிப்பக நிறுவனங்கள் மற்றும் 117 பங்குதாரர்கள் கண்காட்சிக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மிஷ்ரஃப் சர்வதேச கண்காட்சி மைதானத்தின் 5, 6, 7 மற்றும் 7 பி அரங்குகளில் புத்தகக் கண்காட்சி நடைபெறும். பார்வையிடும் நேரம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மற்றும் மாலை 4:30 முதல் இரவு 10 மணி வரை. வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கண்காட்சியின் ஒரு பகுதியாக குழு விவாதம், பட்டறைகள், கதை சொல்லுதல் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இக்கண்காட்சி வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.