சவுதி சுகாதாரத்துறை எச்சரிக்கை..! - கடந்த ஆண்டுகளை விட ஃப்ளு காய்ச்சல் தாக்கம், பாதிப்பு அதிகம்!

சவுதி சுகாதாரத்துறை எச்சரிக்கை..!  - கடந்த ஆண்டுகளை விட ஃப்ளு காய்ச்சல் தாக்கம், பாதிப்பு அதிகம்!

ரியாத்: பருவநிலை மாற்றத்தால் வரும் காய்ச்சல் குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என சவுதி சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்திற்கொண்டு மீண்டும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர். முஹம்மது அல் அப்துல் அலி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களை விட இந்த முறை நோய் தீவிரம் அடைந்துள்ளது. பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். காய்ச்சலின் சிக்கல்கள் மரணத்திற்கு வழிவகுக்கும் என்று டாக்டர் முஹம்மது அல் அப்துல் அலி விளக்கினார். அதே சமயம், தீவிர நோய் அறிகுறிகளைக் காட்டுபவர்களில் 80 சதவீதத்தை தடுப்பூசிகளால் பாதுகாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

தடுப்பூசி போடுவதும் முகக்கவசம் அணிவதும் காய்ச்சலைத் தடுக்க மிக முக்கியமான நடவடிக்கைகளாகும். இதுதவிர மழை, கடும் குளிர் போன்றவற்றில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்றார். 

சௌதி அரேபிய சுகாதார அமைச்சகம், காய்ச்சல் தடுப்பூசியைப் பெறுவதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சிறப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இந்த பிரச்சாரங்கள் வயதானவர்கள், பிற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் போன்றவர்களை இலக்காகக் கொண்டவை. இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் குறிப்பிட்ட பக்கவிளைவுகள் ஏதுமில்லை என்றும் உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய காய்ச்சல் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும். நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, காது தொற்று, இரத்த தொற்று மற்றும் மரணம் கூட ஆற்படுத்தும் ஆபத்து உள்ளது. 38°Cக்கு மேல் காய்ச்சல், குளிர், தசை வலி, தலைவலி, தொண்டை வலி, நீடித்த இருமல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் நீர்ப்போக்கு ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.