மரணதண்டனை நிறுத்தப்பட்டால் மட்டுமே குவைத்திகளுக்கு விசா இல்லாத அனுமதி! - ஐரோப்பிய பாராளுமன்றம்
குவைத் சிட்டி: குவைத், கத்தார், ஓமன், ஈக்வடார் போன்ற நாடுகளில் மரணதண்டனை நிறுத்தப்பட்டால், அந்நாட்டு குடிமக்கள் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஐரோப்பிய பாராளுமன்றம் தெரிவித்துள்ளது.
குவைத், கத்தார், ஓமன் மற்றும் ஈக்வடார் ஆகிய நாடுகளின் குடிமக்கள் 90 நாட்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் வரைவு முன்மொழிவுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிவில் உரிமைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
வியாழன் அன்று நடந்த வாக்கெடுப்பில், சிவில் உரிமைக் குழுவில் 42 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 16 பேர் எதிராகவும் வாக்களித்தனர். குவைத்தை பொறுத்தவரை, மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விசா இல்லாத பயணத்தை ஆதரித்தனர். விசா இல்லாத பயணத்தை அனுமதிக்கும் முடிவை எடுப்பதற்கு முன், மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைப்பதற்கான முடிவை இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நவம்பரில் குவைத்தில் ஏழு பேர் தூக்கிலிடப்பட்டதால் ஐரோப்பிய ஒன்றியம் கோபமடைந்தது. திட்டமிட்ட கொலை உள்ளிட்ட குற்றங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட நான்கு குவைத் பிரஜைகள் மற்றும் மூன்று வெளிநாட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.