பாஸ்போர்டில் ஒரே பெயர் மட்டும் இருந்தால் யுஏஇ-க்கு விசிட் விசாவில் இனி செல்ல முடியாது!

பாஸ்போர்டில் ஒரே பெயர் மட்டும்  இருந்தால் யுஏஇ-க்கு விசிட் விசாவில் இனி செல்ல முடியாது!

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் பயணம் செய்யும் விருந்தினர்கள் தங்கள் பாஸ்போர்ட்டில் முதன்மை (First Name) மற்றும் இரண்டாம் நிலை (Surname) பெயர்கள் இருப்பதையும், அது வெவ்வேறாக இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அனைத்து டிராவல்ஸ் முகவர்களுக்கும் அனுப்பியுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அதேபோல் இண்டிகோ நிறுவனமும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி, “குடும்பப்பெயர் அல்லது கொடுக்கப்பட்ட பெயரில் ஒற்றைப் பெயர் (சொல்) கொண்ட எந்தவொரு பாஸ்போர்ட் வைத்திருப்பவரும் ஐக்கிய அரபு எமிரேட் குடியேற்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார். மேலும் அந்த பயணி INAD ஆகக் கருதப்படுவார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. INAD என்பது தாங்கள் பயணம் செய்ய விரும்பும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத பயணிகளுக்குப் பயன்படுத்தப்படும் சொல் ஆகும். இந்த புதிய வழிகாட்டுதல் இன்று முதல் (நவம்பர் 21) நடைமுறைக்கு வருகிறது.

சுற்றறிக்கை விவரம்:

1. அதாவது பிரவீன் குமார் என்பவரின் பாஸ்போர்டில் FirstName மற்றும் Surname இரண்டும் ஒரே பெயராக பிரவீன் குமார் என இருந்தால் அந்த பயணி INAD ஆகக் கருதப்படுவார். 

2. அதேபோல் பிரவீன் குமார் என்பவரின் பாஸ்போர்டில் FirstName மற்றும் Surname இரண்டில் எது ஒன்றும் இல்லாவிட்டாலும் அந்த பயணி INAD ஆகக் கருதப்படுவார்.

3. மேலும் பிரவீன் குமார் என்பவரின் பாஸ்போர்டில் FirstName மற்றும் Surname இருந்து அந்த பெயர் பிரவீன்குமார் என சேர்ந்து இருந்தாலும் அந்த பயணி INAD ஆகக் கருதப்படுவார்.

முதல் கட்டமாக டூரிஸ்ட் அல்லது விசிட் விசாவில் பயணம் செய்பவர்களுக்கு இந்த விதி பொருந்தும், ஆனால் குடியிருப்பு அல்லது வேலைவாய்ப்பு விசாக்கள் விலக்கப்படும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது. எனினும் வரும் காலத்தில் அனைத்து விசாக்களுக்கும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.