உலகக் கோப்பையின் போது 4,000 பேருந்துகளை இயக்கும் கத்தார் போக்குவரத்துக் கழகம்!
ஃபிபா (FIFA) உலகக் கோப்பை போட்டியை முன்னிட்டு கத்தாரில் போக்குவரத்து சேவையை இயக்கும் Mowasalat (karwa) தனது சேவைக்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கத்தாருக்கு வருகை தரும் உலகக் கோப்பை ரசிகர்களுக்கு வசதியான மற்றும் மென்மையான போக்குவரத்து அனுபவத்தை உறுதி செய்வதற்காக Mowasalat அதன் சிறப்பு தொழில்நுட்ப குழுக்களை ஒன்றிணைத்துள்ளது.
அதனடிப்படையில் உலக கோப்பை போட்டியின் போது கத்தாரில் சுமார் 4,000 பேருந்துகள் இயக்கப்படும் என்றும், அவற்றில் 3,000 உலக கோப்பை ரசிகர்களுக்காக பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன், இதில் பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றத்துடன் இயங்கும் 800 க்கும் மேற்பட்ட முழு எலக்ட்ரிக் பேருந்துகள் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பையின் போது இயக்கப்படும் போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ நிலையங்கள் மற்றும் போட்டி நடைபெறும் மைதானங்களுக்கு போக்குவரத்து சேவை, "பார்க் அண்ட் மூவ்" நிறுத்தங்களுக்கு போக்குவரத்து சேவை தோஹா மற்றும் முக்கிய குடியிருப்புகளில் இருந்து போக்குவரத்து சேவை ஆகியவை அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இது ஹமாத் மற்றும் தோஹா சர்வதேச விமான நிலையங்களை போட்டி நடைபெறும் மைதானங்கள் மற்றும் தோஹாவின் முக்கிய பகுதியுடன் இணைக்க அர்ப்பணிக்கப்பட்ட ஷட்டில் பேருந்து சேவைக்கு கூடுதலாக உள்ளது. அத்துடன் போட்டி நடைபெறும் அனைத்து இடங்களுக்கும் ரசிகர்களுக்கு போக்குவரத்தை வழங்கும் வகையில் எக்ஸ்பிரஸ் பேருந்து சேவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மெட்ரோ லிங்க் சேவைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுமார் 248 பேருந்துகள் உள்ளன என்றும் இதில் 90 எலக்ட்ரிக் ஜீரோ-எமிஷன் பேருந்துகள் அடங்கும் என்றும், அவை வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இது தவிர, 3,000 க்கும் மேற்பட்ட டாக்சிகள் மற்றும் லிமோசின்கள் ரசிகர்களுக்கு சேவை செய்ய தயாராக உள்ளன என கூறப்பட்டுள்ளது. மேலும் அவை ஹமாத் சர்வதேச விமான நிலையம், தோஹா சர்வதேச விமான நிலையம் மற்றும் நாட்டின் முக்கிய இடங்களில் போக்குவரத்து சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.