தைமா, அல்-உலா, கெய்பர், ஹதாஜ் கிணறு - பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் திருவிழா!

தைமா, அல்-உலா, கெய்பர், ஹதாஜ் கிணறு - பாரம்பரியங்களை மீட்டெடுக்கும் திருவிழா!

சவூதி அரேபியா ஒரு அழகான நாடு, இது பல வரலாற்று இடங்கள் மற்றும் அழகான சுற்றுலா தலங்களைக் கொண்டுள்ளது. அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ள அழகிய பாலைவனம் பார்வையாளர்களின் கண்களை ஈர்க்கிறது. அதன் கவர்ச்சிகரமான கட்டிடங்கள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு இந்த நாட்டின் அழகை மேம்படுத்துகிறது.

சவூதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் அமைந்துள்ள அழகிய நகரங்களில் ஒன்று தைமா Tayma. தைமா ஒரு சோலை நகரம். இது ஒரு பண்டைய வரலாற்று ரீதியான நகரம். சமீபத்திய கண்டுபிடிப்புகள், உலக வரலாற்றில் மிகவும் பழமையான காலமான வெண்கல யுகத்தில் தைமா உருவானதாக காட்டுகின்றன. தைமா பண்டைய உலகின் மிக முக்கியமான வணிக மையங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதியில் நாகரிகங்களின் சந்திப்பு இடமாக இருந்துள்ளது.

இந்நிலையில், சவுதி அரசின் திட்டமிடலில் பண்டைய நகரமான அல்-உலாவுக்கான (AlUla) ராயல் கமிஷன், தைமா Tayma போன்ற பாரம்பரிய தளங்களை புதுப்பித்து மீட்டெடுத்துள்ளது. 

நவ. 11 அன்று, அல்-உலாவுக்கான ராயல் கமிஷன், அல்-உலா, தைமா மற்றும் கெய்பர் ஆகிய மூன்று  இந்த பண்டைய சோலைகளின் மறுமலர்ச்சியைக் கொண்டாடுவதற்கும், பல்வேறு கலாச்சார மற்றும் வரலாற்று அனுபவங்களின் மூலம், அல்உலாவை தைமா மற்றும் கெய்பர் கவர்னரேட்டுகளுடன் இணைக்கும் "பண்டைய ராஜ்ஜியங்கள்" திருவிழாவை அறிமுகப்படுத்தியது. நவம்பர் 27 வரை இந்த திருவிழா நடைபெறுகிறது. அதனடிப்படையில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த விழா உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியங்களை புதுப்பிக்கும் கலாச்சார அனுபவங்களைக் கொண்டுள்ளது.

அல்உலா மற்றும் கைபர் உள்ளிட்ட பகுதியில் உள்ள மூன்று சோலைகளில் ஒன்றான தைமா, மறுசீரமைக்கப்பட்ட பிறகு பொதுமக்களுக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சோலை நகரம் தைமா

தைமா நகரம் வரலாறு நிறைந்த நகரம், இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்ட நகரம். நகரம் வெவ்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. 

தைமா பகுதி பெரும்பாலும் யூதர்களால் ஆளப்பட்டது. இது சவூதி அரேபியாவின் பழமையான யூத குடியிருப்புகளில் ஒன்றாக அறியப்படுகிறது. இந்த ஊரைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக ஒரு பெரிய சுவர் எழுப்பப்பட்டது. நபுடினஸ் மன்னன் இந்த நிலத்தை ஆண்டபோது பாபிலோனியாவின் தலைநகராக தைமா இருந்தது.

கிமு 1192 முதல் 1160 வரை பார்வோன் ராமேஸ் 3 இந்த நிலத்தை ஆண்டதாக ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர். இந்நகரம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது மட்டுமல்ல, அதில் உள்ள ஹதாஜ் கிணறும் பழங்காலத்திலிருந்தே உள்ளது.

நீடித்த ஹதாஜ் கிணறு

பண்டைய ஹதாஜ் கிணறு வடக்கு தபூக் பிராந்தியத்தின் ஒரு அடையாளச் சின்னமாகும். இராச்சியத்தின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றான தைமாவில் அமைந்துள்ள இந்த கிணற்றில் 85,000 ஆண்டுகளுக்கு முந்தைய பல நினைவுச்சின்னங்கள் உள்ளன.

அரபியில் பிர் தைமா என்று அழைக்கப்படுகிறது. இது தைமா நகரின் மையத்தில் அமைந்துள்ளது. 50 அடி விட்டம் கொண்ட இந்த கிணறு, 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நீரை வழங்கி வருகிறது. விவசாயிகள் ஒட்டகங்களைப் பயன்படுத்தி ஹதாஜ் கிணற்றிலிருந்து எடுத்து வந்த நிலையில், நவீன மோட்டார் உபகரணங்களின் பெருக்கத்தால் இனி ஒட்டகங்களைப் பயன்படுத்தி தண்ணீரை எடுக்கத் தேவையில்லை.

இந்த கிணறு ஆறாம் நூற்றாண்டில் பாபிலோனிய மன்னர் நபோனிடஸ் என்பவரால் கட்டப்பட்டது, பண்டைய கால அராபியர்களின் நீரின் கடவுளின் பெயரால் கிணறு ஹதாஜ் என்று பெயரிடப்பட்டது  என கூறப்படுகிறது.

ஹதாஜ் கிணறு 80 க்கும் மேற்பட்ட நீரோடைகள் மூலமாக மக்களுக்கு, விவசாயிகளுக்கு பயன்பட்டு வருகிறது. 50 மீட்டர் விட்டம் கொண்ட கற்களால் சூழப்பட்ட வட்ட வடிவ கிணற்றில் மரச்சட்டங்கள், கயிறுகள், தோல் பைகள் மற்றும் பல்வேறு கருவிகளால் மக்களுக்கு அதன் நான்கு பக்கங்களிலிருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டது.

பழங்காலத்தில், மக்கள் இந்த இடத்தில் கூடிவந்தனர். வணிகர்கள், பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் சந்திக்கும் முக்கிய இடமாகவும், தங்கும் இடமாகவும் இது இருந்தது.

நாட்டின் ஒரு பெரிய வரலாற்று உடைமையாக அழகாக கட்டப்பட்ட கிணறு பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கிணற்றிற்கு பைபிளில் உள்ள வார்த்தைகள் தைமா நகரத்தின் குறிப்புடன் உள்ளன.

பைபிளின் வார்த்தை: "தேமா தேசத்தின் குடிமகன் தாகமாயிருந்தவனுக்குத் தண்ணீரைக் கொண்டுவந்தான், ஓடிப்போனவனைத் தங்கள் அப்பத்தால் தடுத்தார்கள்." ஏசாயா 21:14

இந்தக் கிணறு புதைந்து போனதையும், மக்கள் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதையும் வரலாறு வெளிப்படுத்துகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, கிணறு இறுதியாக கண்டுபிடிக்கப்பட்டது, மீண்டும் நிறுவப்பட்டது மற்றும் அதன் செயல்பாட்டை மீண்டும் சுலைமான் அல் கோனிம் மீட்டெடுத்தார். கிணறு சவுத் தலைமையில் கிணறு புதுப்பிக்கப்பட்டது மற்றும் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் எடுப்பதற்கு வசதியாக நான்கு பம்புகள் சேர்க்கப்பட்டது.

இந்த கிணறு பழமையானது என்பதை தெளிவாக சித்தரிக்கும் தலைசிறந்த படைப்புகள் இன்னும் ஏராளம் உள்ளது. 

உண்மையில், சவூதி அரேபியா பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த பண்டைய தலைசிறந்த படைப்புகள் சவூதி அரேபியாவின் அழகுக்கு பெரிதும் சேர்க்கின்றன என்றால் மிகையாகாது.

Source: Arabtimes, Lifeinsaudiarabia