மல சிக்கல் என்னும் பெரும் சிக்கல்
ஒவ்வொரு நாளும் அதிகாலை அலாரத்துக்கு பதிலாக, மலம் கழிக்கும் உணர்வு நம்மை உறக்கத்திலிருந்து எழுப்பி விட்டால் நாம் ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்று தாராளமாகக் கூறலாம். மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ’மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்துவைத்தவர்கள்’ என்று சொல்லுவார்கள். பலருக்கும் கல்போல கடினமான மலம் அடைத்துக் கொள்வதால் முழுமையாக மலம் வெளியேறாமல் ஏற்படும் துன்பம் , வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு பிரிதல்... போன்ற மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான உணர்வுகளைக் கொடுப்பவை. தினமும் காலையில் வயிற்றோடு ஏற்படும் போராட்டம் வாழ்வின் மிகப் பெரும் போராட்டமாக மாறிவரும் சூழலில் நாம் வாழ்கிறோம்
இன்றைய உணவு சூழலை பொறுத்தவரை பலதரப்பட்ட அயல்நாட்டு உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்கள் காரணமாக நமது உடலில் பல நோய்கள் வருகின்றன.பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகளை உண்பது, உறக்கமின்மை,சரியாக தண்ணீர் அருந்தாமல் இருப்பது, உணவு உண்ணும்போது வேறு எதாவது கவனத்தில் இருப்பது,பால் சம்மந்தமான உணவுகளை அதிகம் உண்பது, பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு வகைகளை உண்பது போன்றவையும் நாம் பயன்படுத்தும் துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் இதற்கு கூடுதல் காரணியாகும் . அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது தண்ணீரை அதிகம் பருகாமல் இருப்பது போன்ற பல காரணங்களால் மலசிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. அதே போல நாம் பிற நோய்களுக்காக சாப்பிடும் சில மருந்துகளின் பக்க விளைவுகளால் கூட மலசிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது
மலச்சிக்கலால் உடலின் பல பாகங்களில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. நமது செரிமான உறுப்பு வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயற்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் ஒரு மனிதனுக்கு தொடரும் பட்சத்தில் சிறு நீரக கல் ஏற்படுவது,அதிகமான மன அழுத்தம் உண்டாவது, கடும் எரிச்சல் மற்றும் கோப உணர்ச்சி, அதிக படியான சோர்வு, எதிலும் ஆர்வமின்மை போன்ற பல உப நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு
மேலும் நம்முடைய உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். நம்மில் பலரும் வேலை பளு காரணமாக மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது அதை அடக்கி வைத்துக் கொள்ளும் பழக்கமுடையவர்களாக இருக்கிறோம் . இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது.
வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் ஏற்பட்டால் ஒருவரால் எதிலும் முழுமையாக கவனம் செலுத்த இயலாது
காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.
மலம் கழிக்கும் முறை யில் கவனிக்க வேண்டியவை :
வெஸ்டர்ன் முறை என்றழைக்கப்படும் மேலைநாட்டுப் பாணியிலான கழிப்பறையில் (Western toilet) அமர்ந்துகொண்டு மலம்கழிக்க முயலும்போது பலருக்கும் ஒரு சிறுகதையே படித்து முடித்திருந்தாலும், மலம் வெளியேறாமல் தவிப்பவர்களும் உண்டு. நமது மூட்டுகளில் எந்த பிரச்சனையும் இல்லையெனில், தொன்று தொட்டே வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் (Squatting position) பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும். மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிகளவில் இருக்கும் என்பது ஆய்வுகளின் தகவல் . குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேலைநாட்டு பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாக கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும். அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும்; இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும் என்பது நாம் பாரம்பரியமாக கண்டு வரும் முறை.
என்ன செய்ய வேண்டும்
மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். அதிலிருந்தே காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால் இன்று குழந்தைகள் முதல் சிறு வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. இயற்கையை இயக்க, செயற்கையைத் தேவையில்லாமல் வரவழைப்பது தவறு.
மல சிக்கல் தீர எளிய மருந்துகள்
சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய்... என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது.
இயற்கையாகவே நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளை துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fibre) மற்றும் கரையாத நார்ச்சத்துள்ள (Insoluble fibre) உணவுகளை கலந்து உட்கொள்ளலாம். பசலை, சிறுகீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழுதானியங்கள், கொட்டை வகைகள்... என அனைத்தும் தேவை.
மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம்
மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது. நீரில் ஊறவைத்த வெந்தயம், சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதைப் பயன்படுத்தும்போது, மலச்சிக்கலை நிவர்த்தி செய்யும்; உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் அறுபத்தைந்து சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
தண்ணீர்… விளக்கெண்ணெய்
குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ’புரோபையாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இள வெந்நீர் குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. பன்னாட்டு குளிர்பானங்களை எப்போதும் அருந்தக் கூடாது. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. இதனை மீண்டும் நம் தலைமுறைக்கும் பழக்கி விடுவது நல்லது
செரிமானத்தை சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். ஆறு மாத கால இடைவெளியில் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும். நீண்டகால மலக்கட்டினை சரிசெய்ய, ’பீச்சு’ (Enema) எனப்படும் புற மருத்துவ முறையும் அற்புதமான பலனை அளிக்கக்கூடியது.
எளிதில் கிடைக்கும் இந்த பொருள்களும் பெரிதும் உதவும்
மலச்சிக்கல் நீங்க கடுக்காய் பொடி பெரிதும் உதவுகிறது. அதிகாலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் கடுக்காய் பொடியை சுடுதண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர மலச்சிக்கல் குணமாகும். அருகில் கழிவறை வசதி இல்லாமல் அலுவலகம் அல்லது பணி
இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பவர்கள் விடுமுறை தினங்களில் இதனை பரிசோதிக்கலாம்.
திரிபலா பொடி ஒரு சிறந்த மருந்தாகும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றையும் மருத்துவ முறைப்படி ஓன்று சேர்த்து உருவாக்கும் பொடியே திரிபலா பொடி. இந்த பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை தினமும் இரவில் அரை ஸ்பூன் சாப்பிட்டால் மலச்சிக்கல் சரியாகும்.காலையில் வெது வெதுப்பான தண்ணீர் அருந்துவது கூடுதல் சிறப்பு
பப்பாளி மற்றும் அத்திப்பழம் பெரிதும் துணைபுரிகிறது. உலர்ந்த அத்தி பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து காலையில் உட்கொண்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். அதே போல உணவை உண்பதற்கு முன்போ அல்லது பின்போ பப்பாளி பழத்தை உண்டால் மலச்சிக்கல் குணமாகும்.
குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் மாலையில் ஐந்து முதல் பத்து உலர்ந்த திராட்சையை நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து அதை நீரில் நன்கு பிசைந்து கொடுத்தால் மலச்சிக்கல் விரைவில் நீங்கும்.
கொத்தமல்லி, மிளகாய், ஓமம், மிளகு போன்றவற்றில் நார் சத்து அதிகம் உள்ளது. ஆகையால் இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. அதே போல பசலைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல் நீங்கும்.
மல சிக்கல் உட்பட உடலில் தென்படும் அனைத்து அறிகுறிகளும் உடல் நம்மோடு பேசும் மொழியே. உடல் பேசும் மொழிகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர உலகத்தில் மெளனிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் மொழியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மலச்சிக்கல்… அநேக நோய்களுக்கு அடிநாதம்! தோல் நோய்களில் தொடங்கி இதய நோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம். மலம் இளகலாக வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் பயில்ஸ் எனப்படும் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula) போன்ற நோய்கள் உறுதியாக உண்டாகும். மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமானப் உறுப்புகளை கவனிக்கச் சொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்...
மேல்சொன்ன சிக்கல்களை அகற்றினால் மல சிக்கலை மாற்றிடலாம்
ஹீலர் ஃ பிர்தவ்ஸ்