உலகக் கோப்பையை நினைவுகூரும் வகையில் புதிய கத்தார் ரியால் நோட்டுகள், நாணயங்கள் வெளியீடு!

உலகக் கோப்பையை நினைவுகூரும் வகையில் புதிய கத்தார் ரியால் நோட்டுகள், நாணயங்கள் வெளியீடு!

தோஹா: FIFA உலகக் கோப்பை 2022 நினைவாக, நேற்று 22-ரியால்  நோட்டுக்களை கத்தார் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஒன்று, ஐந்து, 10, 50, 100 மற்றும் 500 ரியால் நோட்டுகளுடன் புதிய நோட்டுக்கள் மற்றும் நாணயங்களும் இனி புழக்கத்தில் இருக்கும். 22-ரியால் நோட்டுடன், ஃபிஃபா மற்றும் உலகக் கோப்பை சின்னங்கள் அடங்கிய நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

கத்தார் மத்திய வங்கியின் ஆளுநர் ஷேக் பந்தர் பின் முகமது பின் சவுத் அல் தானி, ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவுடன் இணைந்து நோட்டு மற்றும் நாணயங்களை வெளியிட்டார்.

22-ரியால் நோட்டில் ஒருபுறம் லுசைல் ஸ்டேடியமும் மறுபுறம் அல் பேட் ஸ்டேடியமும், கத்தார் 2022 சின்னம் மற்றும் உலகக் கோப்பை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

புதிய ரியால் நோட்டுகளில் அழகான வடிவமைப்பு மற்றும் தரமான பொருட்கள் உள்ளன என்று மத்திய வங்கி கூறியுள்ளது. புதிய நோட்டில் முதல் முறையாக பாலிமர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

“புதிய நாணயமானது நாட்டின் கால்பந்தின் வரலாற்றை பிரதிபலிக்கிறது மற்றும் நாட்டிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் உட்பட அதைப் பெற விரும்புவோருக்கு வழங்கப்படுகிறது” என்று கத்தார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.