அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை நிறுத்திவைத்த அமீரக அரசு!
அபுதாபி: அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை ஐக்கிய அரபு அமீரகம் நிறுத்தியுள்ளது. நிதி அமைச்சின் அனுமதியின்றி 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தக் கூடாது என்பன உள்ளிட்ட புதிய விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை அமைச்சரவை வகுத்துள்ளது.
அரிசி, கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, முட்டை, பால், பருப்பு வகைகள், விளைபொருட்கள் மற்றும் ரொட்டி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பூர்வாங்க பட்டியல் என்றும், விரைவில் மேலும் பல பொருட்கள் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
உள்நாட்டில் கிடைக்காத பொருட்களின் இறக்குமதிக்கு வரி விதிக்கப்படாது என்றும் புதிய முடிவு கூறுகிறது. இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உதவும் மற்றும் அவர்களின் தயாரிப்புகளுக்கான சந்தைகளைக் கண்டறிய உதவும் என கூறப்படுகிறது.