குவைத்தில் ஃபேமிலி விசா வழங்கும் நடவடிக்கை விரைவில்...! - அமைச்சகம் அறிவிப்பு
குவைத் சிட்டி: குவைத்தில் ஃபேமிலி விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்னும் சில நாட்களில் ஃபேமிலி விசாக்கள் வழங்கும் நடவடிக்கை தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உள்துறை அமைச்சகத்தின் வீட்டுவசதி துறையை மேற்கோள் காட்டி குவைத் ஊடகங்கள் இந்த வகையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. முதற்கட்டமாக, வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த குழந்தைகளை குவைத்துக்கு அழைத்து வர விசா வழங்கப்படும். அதன் பிறகு கணவன் மனைவி மற்றும் பெற்றோருக்கு குவைத்தில் குடும்ப உறுப்பினர்களுடன் தங்குவதற்கு விசா வழங்கப்படும்.
குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய நிபந்தனைகளின்படி ஃபேமிலி விசாக்கள் வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து ஸ்பான்சர் செய்யும் குடும்ப உறுப்பினர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 500 குவைத் தினார்களாக (1.32 லட்சம் இந்திய ரூபாய்க்கு மேல்) இருக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
தற்போது குவைத்தில் ஃபேமிலி விசா வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் நாட்டில் தங்குவதற்கான உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், குடும்ப விசா வழங்குவதற்கான அளவுகோல்களை மாற்றுவதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது இருப்பதாக அதிகாரிகள் விளக்குகின்றனர்.
மைனர் குழந்தைகளை அழைத்து வருவதற்கு சம்பள வரம்பு தேவைப்படாது. மனிதாபிமான அடிப்படையில் இது தொடர்பாக விலக்கு அளிக்கப்படலாம்.
இதற்கிடையில், விசிட் மற்றும் ஸ்பான்சர் விசா வழங்குவதற்கான காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை. விசா சீர்திருத்தங்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்த ஆய்வு அறிக்கையின்படி, சம்பளத் தேவையை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் மாற்றம் வருமா என்பது தெரியவில்லை. தற்போது ஃபேமிலி விசா மற்றும் ஸ்பான்சர் விசா வழங்கப்படாததால் வெளிநாட்டவர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.